பயன்படுத்தப்படாத அவரையின வகையினை சார்ந்த பயிர்களிலிருந்து புரதச்சத்து நிறைந்த ஊட்டம் மிகு உணவுப் பொருட்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் புரதம் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளினை மேம்படுத்துதல்.

கலாநிதி.பிரதீப் கஜநாயக / திருவதி நயனதாரா ஜயசிங்ஹ - உயிர் அமைப்பு தொழில்நுட்ப திணைக்களம் தொழில்நுட்ப பீடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 

COVID-19 தொற்றுநோயால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது, மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதுடன் அதன் விளைவுகள் இன்னும் உணரப்படுகின்றன. இதன் விளைவாக, இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளின் விலை உயர்ந்ததால், பிள்ளைகள் உட்பட மக்கள் தொகையில் அநேகமானோர், புரதத்திற்கு பதிலாக அதிக கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட முக்கிய பிரச்சனை என்னவெனில், பிள்ளைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்தமை ஆகும். உலக சந்தையில் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற காரணிகளால் புரதச்சத்து நிறைந்த உணவுகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. பிள்ளைகள் மத்தியில் மட்டுமல்ல, நாட்டின் தொழிலாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் மத்தியிலும் புரதக் குறைபாடு எனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.விலங்கு புரதம் அதிகம் விலை மிக்கதாக இருப்பதால், பல நடுத்தர குடும்பங்கள் மற்றும் தினசரி கூலி பெறுபவர்கள் தங்கள் அன்றாட உணவில் இருந்து விலங்கு புரதத்தை அகற்றி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இப்போது பல நடுத்தர வர்க்க மற்றும் தினசரி வருமானம் கொண்ட குடும்பங்களாவன, குறைந்த விலையினதாகவும் மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மையினை கொண்டனவாகவும் தாவர புரதம் இருப்பதனால் அவற்றினை நம்பி தமது உணவு பழக்க முறைகளினை அமைத்து வருகின்றனர்.நாட்டின் தேசிய விவசாயத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும்,கால்நடை மற்றும் கோழிப்பண்ணைத் தொழில்களை ஆதரிப்பதற்காக, இலங்கையானது, சோயாபீன் எனப்படும் உணவின் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவை இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற சோயாபீனை பிரதானமாக உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. இந்த சோயாபீன் உணவானது, கால்நடை தீவனத்தில் இருக்க வேண்டிய புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்களினை,அதீதமாக கொண்டுள்ளன. இது இறைச்சி, பால் மற்றும் முட்டைகளுக்காக வளர்க்கப்படும் விலங்குகளின் ஆரோக்கியத்தையும் உற்பத்தித்திறனையும் உறுதிப்படுத்த உதவுகிறது.இலங்கையில் கோழி மற்றும் கால்நடைப் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் உணவுத் தேவைப்பாட்டிற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உயர்தரமான சோயாபீனின் நிலையான விநியோகமானது முக்கியமானதாகி வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் உடற்கட்டமைப்புத் துறையும் விளையாட்டு வீரர்களும் குறிப்பிடத்தக்க அளவில் போசணைகளினை, குறிப்பாக தேவையான புரதம் மற்றும் பிற துணை நிரப்பிகளை வாங்கும் திறனின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.பல உடற்கட்டமைப்பு வீரர்கள் தங்கள் அன்றாட புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிமித்தம் இந்த துணை நிரப்பிகளினை பயன்படுத்துகின்றனர், அவை செயல்திறன், தசை வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்புக்கு அவசியமானவை ஆகும்.இருப்பினும், நாணய மதிப்பு குறைந்து வருவதால், இந்த துணை நிரப்பிகளினை வாங்குவதற்கு உள்ள இயலும் தன்மையானது குறைந்து வருகின்றமையானது கவலைக்குரியதொரு விடயமாகும்.முன்னர்,நிதி ரீதியிலான கட்டுப்பாடுகள் இன்றி, தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலுமையினை கொண்டிருந்த உடற்கட்டமைப்பு வீரர்கள், தற்போது அவர்கள் உட்கொண்ட துணை நிரப்பிகளின் அளவினை பல்வேறு காரணங்களால் குறைக்க நேரிடுவதால் அது அவர்களது உடல் வளர்ச்சிக்கும் மற்றும் பயிற்சி முன்னேற்றத்திற்கும் கெடுதலாக அமைகிறது.

அவரையின வகைகள் மற்றும் பயறு வகைகள் என்பன மதிப்புமிக்க தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் ஆகும். பயறு வகைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பருப்பானது , இலங்கை உணவு வகைகளில் ஒரு முக்கிய உணவாகும், இது பெரும்பாலும் தேங்காய் பால் மற்றும் சுவையூட்டல்களுடன் சமைக்கப்படுகிறது.கருப்பு மொச்சைகள் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை கறி மற்றும் “salads” தயாரிப்பதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை புரதம் மற்றும் நார்ச்சத்தை கொண்டவையாகும். சோயாபீன்ஸ் மற்றும் சோயா இறைச்சி என்பன பொதுவாக சைவ உணவு உண்பவர்களால் உட்கொள்ளப்படுகின்றன. இவை சுவையாக சமைக்கப்படுவதற்கு சரியான முறையில் சுவையூட்டிகளினை பயன்படுத்துவது அவசியமாகும்.இலங்கையில், துவரம் பருப்பு (pigeon peas), பூனைக்காலி அவரை (velvet beans,) மற்றும் சிறகவரை (winged beans) போன்ற பயன்படுத்தப்படாத அவரையின வகைகளில் உள்ளடங்கியுள்ள நிலையான மற்றும் செலவு குறைந்த புரத மாற்றுகளில் கவனம் செலுத்த வேண்டும். இவை அதிக ஊட்டச்சத்தினையும் மற்றும் குறைந்த சாகுபடி செலவுகளைக் கொண்டுள்ளன, இவற்றினை தெரிவு செய்வதன் மூலம், புரதச்சத்தின் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.பூனைக்காலி அவரையானது (velvet beans)பொதுவாக “Wanduru maa (Mucuna pruriens)” என்று அழைக்கப்படும். இது, அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளாக கருதப்படுகிறது என்பதுடன், இது உணவுமுறைகளில் குறிப்பாக புரதக் குறைபாடு அதிகமாக உள்ள பகுதிகளில் அதீதமாக பயன்படுத்தப்படுகிறது. இவை அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுடன், மேலதிகமாக, அவற்றின் மருத்துவ குணங்களுக்காகப் பெயர் பெற்றது. சமிபாடடைதல் நிலையினை மேம்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் உடலின் ஒட்டுமொத்த சுகாதார நிலையினை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் இவை பயன்படுத்தப்படுகின்றன.பூனைக்காலி அவரையில் உள்ள, உயிரியல் செயல்பாடுடைய சேர்மங்களாவன இந்த அவரையிலிருந்து பெறக்கூடிய சுகாதார ரீதியிலான நன்மைகளுக்கு பங்களிக்கின்றன. இந்த அவரையானது,சமையல் மற்றும் நோய்கள் தொடர்பிலான சிகிச்சை செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதன் ஊடாக இந்த தாவரமானது, பல்துறைகளில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருக்கின்றது.உள்ளூர் உணவினை பதப்படுத்துதல் மற்றும் தாவர அடிப்படையிலான புரத கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வது, உணவு தொடர்பிலான உத்தரவாதத்தினை மேம்படுத்துவதோடு புரத உணவுச் செலவுகளை மட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக அமையும். இந்த மாற்று வழிகளை ஊக்குவித்தலானது, உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதற்கும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் தன்னிறைவு பெற்ற உணவு முறையை உருவாக்குவதற்கும் பாதை வகுக்கும். (வடிவேல் மற்றும் ஜனார்த்தன், 2000).

சோயாபீன்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு 25-30% புரதத்தை கொண்டுள்ள பூனைக்காலி அவரையானது (காலிடாஸ் மற்றும் பலர், 2014; பேபி மற்றும் பலர், 2023; எசெக்பே மற்றும் பலர், 2023) மிகவும் சத்தான அவரையின வகையாகும். இந்த வகை அவரையானது , அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் நரம்பியல் நன்மைகளை வழங்கும் எல்-டோபா போன்ற உயிரியல் சேர்மங்களினை கொண்டுள்ளன. இந்த விதைகள் நீரிழிவு நோய், முடக்கு வாதம், பார்கின்சன் நோய், பெருந்தமனி தடிப்பு, காய்ச்சல் மற்றும் வலி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சுகாதார ரீதியில் நன்மைகளை வழங்குகின்றன. மாதவிடாய் பிரச்சினைகள், மலச்சிக்கல், நீர் வீக்கம், காய்ச்சல் மற்றும் காசநோய் ஆகியவற்றை நிவர்த்தி செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்காலி அவரை விதைப் பொடியானது, மலட்டுத்தன்மையுள்ளவர்களுக்கு ஒரு மறுசீரமைப்பு : “tonic” ஆகும்.இது, பாலுணர்வைத் தூண்டும் மருந்தாகச் செயல்பட்டு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட விந்தணுக்களின் தரத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது. மலட்டுத்தன்மையுள்ள ஆண்களின் விந்தணு பாய்மத்தில் மற்றும் குருதித் தெளிமத்தில் (serum) dopamine, noradrenaline மற்றும் சுரப்பு நீர் அளவு குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.. பின்வரும் அட்டவணை 100 கிராம் பூனைக்காலி அவரையில் உள்ள ஊட்டச்சத்து கலவையைக் காட்டுகிறது (Ortega Monge et al., 2022).

மூலகம்: Baby et al., 2023

பூனைக்காலி அவரையினை புரத மூலமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுதலானது, இலங்கைக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் விவசாய நன்மைகளைத் தரும். பூனைக்காலி அவரையானது, பல்வேறு சூழல்களில் செழித்து வளரக்கூடிய பல்துறை பயிராகும். பூனைக்காலி அவரை பயிர்களினை பொறுத்த வரையில் அவற்றிக்கு நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவைப்பட்டாலும், அவை மணல் தன்மை நிறைந்த அல்லது தரமிழந்த மண்ணிலும் வளரக்கூடியது . அவற்றிக்கு 650 முதல் 2,500 மிமீ மழை தேவைப்பட்டாலும், இவற்றின் வறட்சியைத் தாங்கும் தன்மை காரணமாக, குறைவான மழையுடன் இவை வாழக்கூடியதாக .உள்ளது.அவை வெப்பமான பகுதிகளில் செழித்து வளரும் என்றாலும், 15 முதல் 35°C வரையிலான வெப்பநிலை போதுமானது. ஏனெனில் இவை மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்துவதால், இவற்றுக்கு அதிக உரம் தேவையில்லை. பூனைக்காலி அவரை பயிர்களாவன,கரிம உரம் மற்றும் இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு போன்ற குறைந்த உள்ளீட்டு விவசாய முறைகளுக்கு ஏற்றது, ஏனெனில் அவை குறைந்த பராமரிப்புடன் வளர்ந்து மகசூல் தரக்கூடிய பயிராகும்.பூனைக்காலி அவரை பயிர்களினை பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பது அவர்களுக்கு புதிய வருமான ஆதாரத்தை வழங்கலாம், இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களை நம்பியிருப்பதைக் குறைக்கலாம் மற்றும் தேசிய உணவுகளில் சார்ந்திருக்கும் நிலையினை வலுப்படுத்தலாம். நைட்ரஜனை மண்ணில் தேக்கி வைத்திருக்கும் அவரை வகை என்ற ரீதியில், பூனைக்காலி அவரையானது மண் வளத்தை மேம்படுத்துகிறது, இரசாயன உரங்களின் தேவையைக் குறைக்கிறது மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

ஊக்கத்தொகைகள், ஆராய்ச்சி, நிதி மற்றும் கொள்கை மேம்பாடு உள்ளிட்ட அரசு மற்றும் விவசாய அதிகாரிகளின் போதுமான ஆதரவுடன், இந்த பயன்படுத்தப்படாத அவரையின வகைகள் இலங்கையின் விவசாய மற்றும் ஊட்டச்சத்து எனப்படும் துறையின் முக்கிய பகுதியாக மாறும் வல்லமையினை கொண்டுள்ளன (Reshma R et al., 2024; Siddhuraju & Becker, 2001)).

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, பூனைக்காலி அவரை தாவரத்தை பயன்படுத்தி புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கு, பூனைக்காலி அவரையானது, அதிக ஊட்டச்சத்து எதிர்ப்பினை கொண்டிருப்பதினால், அதனை சார்ந்த தயாரிப்புக்கள், பாதுகாப்பானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் மாற்றுவதற்கு மேம்பட்ட செயலாக்க முறைகளை உருவாக்குவது ஆகும். இந்த ஆராய்ச்சியின் போது, ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களை அகற்றவும், ஊட்டச்சத்துக்களின் உயிரியல் தன்மையை மேம்படுத்தவும் பல முறைகள் சோதிக்கப்பட்டன. அவற்றில், ஊட்டச்சத்து எதிர்ப்பு குறைப்பு விகிதத்தைக் அதிகளவில் கொண்ட மற்றும் உணவுத் துறையில் பயன்படுத்த மிகவும் வசதியான முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டம் பூனைக்காலி அவரை அடிப்படையிலான புரத பட்டைகளினை உருவாக்குவதாகும், இது குறிப்பாக விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் தமது சுகாதார நலம் குறித்து அக்கறை கொண்ட நபர்களுக்கு மலிவு விலையில் புரத மூலத்தை வழங்குகிறது.இந்த புரதப் பட்டையானது, உடற் கட்டமைப்பு வீரர்களுக்கு இரண்டு முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த பூனைக்காலி அவரையானது அதிக புரதச் சத்தைக் கொண்டுள்ளது மற்றும் இயற்கையாகவே இது ஆண்மையியக்கு நீர் மட்ட (testosterone levels )அளவை அதிகரிக்க செய்வதனால் அது, தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்துகிறது.

பூனைக்காலி அவரை மாவினால் ஆக்கப்படும் இந்த பட்டைகளின், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துவதற்கு, கொட்டைகள், விதைகள் மற்றும் இயற்கை இனிப்புப் பொருட்கள் என்பன இப்பட்டைகள் தயாரிக்கப்படும் போது அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஆராய்ச்சியாளர்கள் பேக்கிங் மற்றும் சமையலில் பயன்படுத்த பூனைக்காலி அவரை மாவினால் செறிவூட்டப்பட்ட மாவை உருவாக்கி வருகின்றனர், இது பாரம்பரிய கோதுமை மாவுக்கு ஆரோக்கியமான மாற்றீடாக ஆகின்றது. இது போலவே,இந்த மாவை பயன்படுத்தி, பிஸ்கட், சக்தியினை தரும் பானங்கள் மற்றும் புரதப் பொடிகள் போன்ற அதிக புரத உணவுகள் மற்றும் பானங்களினை தயாரிக்க இயலும்.இது சனத்தொகையில் பெரும்பான்மையினருக்கு புரதத்தை எளிதாகப் பெற உதவுகிறது.இலங்கையில் பூனைக்காலி அவரைகள் பாரம்பரியமாக ஒரு பொதுவான உணவு ஆதாரமாக இல்லாததால், அவற்றின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றினை விதம் விதமாக எவ்வாறு சமைப்பது என்பது பற்றிய அறிவினையும் மேம்படுத்துவது மிக அவசியமாகும். வணிக ரீதியாக சாத்தியமான உணவுப் பொருட்களில் பூனைக்காலி அவரையினை சேர்ப்பதில் உணவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது, இது பொது மக்களிடையே அவற்றின் நுகர்வை இயல்பாக்க உதவும்.

இலங்கையானது, போதுமான அளவில் புரதத்தை பெற்றுக்கொள்ளல் மற்றும் உணவு நிலைத்தன்மை ஆகியவை தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. பூனைக்காலி அவரை போன்ற பயன்படுத்தப்படாத பயிர்களைப் பயன்படுத்துவது இந்த பிரச்சனைக்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். ஆராய்ச்சியில் முதலீடு செய்வதன் மூலமும் உள்ளூர் விவசாய நடைமுறைகளை ஆதரிப்பதன் மூலமும், நாடு இறக்குமதி செய்யப்பட்ட புரதத்தை அதிகளவில் நம்பியிருக்காது, அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில், சத்தான உணவை வழங்க முடியும். பொதுவான உணவுப் பொருட்களில் பூனைக்காலி அவரையினை சேர்ப்பது தேசிய ரீதியில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதோடு, இலங்கைக்கு மிகவும் நிலையான மற்றும் தன்னிறைவு பெற்ற எதிர்காலத்தை உருவாக்க உதவும்.

உரு 01- பூனைக்காலி அவரைகள் உரு 02- – பூனைக்காலி விதைகள்

உரு 03- – பூனைக்காலி மாவு

References
Baby, C., Kaur, S., Singh, J., & Prasad, R. (2023c). Velvet bean (Mucuna pruriens): A sustainable protein source for tomorrow. Legume Science, 5(3). https://doi.org/10.1002/leg3.178
Chinapolaiah, A., K., H. B., G.N., M., Thondaiman, V., Keshava Rao, V., N., H. R., & S., S. K. (2019). Variability in L-Dopa and other biochemical composition of Mucuna pruriens (L.) an underutilized tropical legume. Industrial Crops and Products, 138. https://doi.org/10.1016/j.indcrop.2019.06.010
Lampariello, L. R., Cortelazzo, A., Guerranti, R., Sticozzi, C., & Valacchi, G. (2011). The Magic Velvet Bean of Mucuna pruriens. In Journal of Traditional and Complementary Medicine (Vol. 1, Issue 4).
Ortega Monge, M. C., Salas, M. F. R., Chavarría-Rojas, M., Berrocal, G. C., & Redondo, G. M. (2022). Universal Aspects of the Genus Mucuna and the Properties Describe of Mucuna urens and Mucuna pruriens. Pharmacognosy Reviews, 16(32), 74–81. https://doi.org/10.5530/phrev.2022.16.11
Ezegbe, C. C., Nwosu, J. N., Owuamanam, C. I., Victor-Aduloju, T. A., & Nkhata, S. G. (2023). Proximate composition and anti-nutritional factors in Mucuna pruriens (velvet bean) seed flour as affected by several processing methods. Heliyon, 9(8). https://doi.org/10.1016/j.heliyon.2023.e18728
Kalidass, A., Mahapatra, C. and Bailey, L.H., 2014. Evaluation of the proximate and phytochemical compositions of an underexploited legume Mucuna pruriens var. utilis (Wall ex Wight). International Food Research Journal, 21(1), pp.191–195.
Reshma. R, Reshma. P, Shaik Nazir Basha, & Reddappa J.B. (2024). VELVET BEAN INSIHTS. In Beans an Insight study (Vol. 1, pp. 191–200).
Siddhuraju, P., & Becker, K. (2001). Preliminary nutritional evaluation of Mucuna seed meal (Mucuna pruriens var. utilis) in common carp (Cyprinus carpio L.) : an assessment by growth performance and feed utilisation. Aquaculture, 105–123.
Vadivel, V., & Janardhanan, K. (2000). Nutritional and anti-nutritional composition of velvet bean: an under-utilized food legume in South India.

கலாநிதி.பிரதீப் கஜநாயக
சிரேட்ட விரிவுரையாளர்
உயிர் அமைப்பு தொழில்நுட்ப திணைக்களம்
தொழில்நுட்ப பீடம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

திருவதி நயனதாரா ஜயசிங்ஹ
இணை எழுத்தாளர்
ஆராய்ச்சி உதவியாளர்
உயிர் அமைப்பு தொழில்நுட்ப திணைக்களம்
தொழில்நுட்ப பீடம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

Author

Related Articles

Back to top button